வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி - பொறியாளர்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல் கைது..!

வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி - பொறியாளர்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல் கைது..!
  • Share this:
சென்னையில் யமாஹா, நிசான் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக பொறியியல் படித்த இளைஞர்களைக் குறிவைத்து 50 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் யமஹா, நிஸான், ஹுண்டாய் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற மோகம் குறைந்து, சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறைக்குள் செல்ல இளைஞர்கள் விருப்பம் காட்டி வருகின்றனர். அவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு போலீசில் சிக்கியுள்ளது.

சென்னை அடுத்த ஒரகடத்தில் இயங்கி வரும் யமஹா மற்றும் நிசான் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி என கூறிக்கொண்டு ஞானசேகர், சுல்தானா கான், விஜய், குமரன் ஆகிய 4 பேர் காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் விஎம் கார்ட் என்ற கன்சல்டன்சியை அணுகி உள்ளனர்.


அதனுடைய உரிமையாளர் தண்டபாணியிடம் தாங்கள் பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ படித்த மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நிரந்தரமான வேலை வாங்கித் தருவதாகக்கூறி அதற்கான ஆவணங்களைக் காண்பித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நான்கு பேரும் காஞ்சிபுரத்தில் உள்ள விஎம் கார்ட் சென்டருக்குச் சென்று நேர்முகத் தேர்வு செய்தனர். நேர்முகத் தேர்வில் 59 மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்புக்கு ஏற்றவாறு மூன்று தவணைகளாகப் பணம் பெற்றனர்.

59 மாணவர்களிடம் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்கி உள்ளனர். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு யமாஹா நிறுவனத்துக்குச் சென்று அழைப்பு கடிதத்தைக் காண்பித்து வேலை வழங்குமாறு கேட்டுள்ளனர். அழைப்புக் கடிதத்தைப் பார்த்த யமாஹா நிறுவனம், இது போலியானது எனக்கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.இது தொடர்பாக, தண்டபாணியிடம் அவர்கள் கேட்டுள்ளனர். தண்டபாணி விசாரித்தபோது சுல்தானா கான் யமஹா நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக் கூறி தங்களை ஏமாற்றி விட்டதாக விஜயும் குமரனும் கூறி உள்ளனர். இவ்விருவரும் நிசான் நிறுவனத்தில் மாணவர்கள் அனைவரையும் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, மேலும் மூன்று லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்!

இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர்கள் தண்டபாணி அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபும் மாவட்ட குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசுவிடம் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மோசடி கும்பலைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஞானசேகர் மற்றும் சுல்தானா கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நிசான் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக நடித்து நேர்காணல் நடத்தி ஏமாற்றிய சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற விஜயையும் அவரின் நண்பர் குமரனையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்ச லட்சமாகப் பணத்தைக் கட்டி பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், எப்படியாவது வேலைக்குச் செல்லலாம் என நினைத்த மாணவ, மாணவிகளைக் குறிவைத்து மோசடி அரங்கேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also see:
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading