சென்னை ஐ.ஐ.டியில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு: இடஒதுக்கீடு முறையை மீறி உயர்சாதியினர் அதிகளவில் நியமனம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்

சென்னை ஐ.ஐ.டியில் பேராசிரியர் பணியிடங்களில், பிற சமூகத்தினரைக் காட்டிலும் உயர் சாதிப் பிரிவினர் அதிகளவில் இடம்பெற்றிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது..

  • Share this:
    சென்னை ஐஐடி இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் ஒன்று. இங்கு, சாதி மற்றும் மதரீதியான பாகுபாடுகள் அதிகளவில் பார்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்து வருகிறது. 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா, தனது இறுதிக் கடிதத்தில், தான் மதரீதியான பாகுபாட்டை சந்தித்ததாக தெரிவித்திருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அண்மையில் சென்னை ஐ.ஐ.டியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த விபின் என்பவர், தான் சாதிரீதியான பாகுபாட்டிற்கு ஆளானதாக தெரிவித்ததுடன், இதனால் வேறு கல்வி நிறுவனத்திற்கு மாறுவதாக மின்னஞ்சல் மூலம் ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு தெரிவித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் உயர் சாதிப் பிரிவினரே அதிக அளவு நியமனம் செய்யப்பட்டு இருப்பதும், இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாமல் இருப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

    அந்தவகையில் 2019-ம் ஆண்டு ஜுன் மாதம் நிலவரப்படி, முன்னேறிய வகுப்பினர் பேராசிரியர் நியமனங்களில், 154 பேர் தேவைப்பட்ட இடத்தில் 273 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 84 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 29 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது தெரியவந்துள்ளது.  இதேபோன்று பட்டியல் சமூகப் பிரிவை எடுத்துக்கொண்டால் 47 பணியிடங்கள் நிரப்பப்படவேண்டிய இடத்தில், வெறும் 15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

    மேலும் பழங்குடியினர் பிரிவை பொறுத்தவரை, 23 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இதேபோன்று இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களிலும், இடஒதுக்கீடு நடைமுறை மீறப்பட்டிருப்பதை ஆர்டிஐ ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதன்படி முன்னேறிய வகுப்பினரில் 156 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 19 பேரும், பட்டியல் சமூகப்பிரிவில் 4 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பழங்குடி மக்கள் பிரிவில் ஒரு நபர் மட்டுமே உதவிப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

    உதவிப் பேராசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை, முன்னேறிய வகுப்பினர் 120 பேர் பணியாற்றுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரில் 18 பேரும், பட்டியல் சமூகப் பிரிவில் 7 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியினர் பிரிவில் ஒரு நபர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பேராசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார். உலகத்தரமும், திறமைகளும் நிறைந்த ஐ.ஐ.டி போன்ற தேசியக் கல்வி நிறுவனங்களில், சமத்துவமும் நிலைநிறுத்தப்படுமா என்கிற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது.
    Published by:Karthick S
    First published: