'ஐஸ்' என்ற பெயரில் விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கும்பல் கைது..!

'ஐஸ்' என்ற பெயரில் விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கும்பல் கைது..!
  • News18
  • Last Updated: February 3, 2020, 7:59 AM IST
  • Share this:
சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் 'ஐஸ்' என்ற பெயரில் விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காவலர்கள் அமுதபாண்டி, வனக்கொடி ஆகியோர் சோதனையிட்டனர்.

அப்போது அவரிடம் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட மர்மப்பொடி ஒன்று இருந்தது. இதை பார்த்து என்ன என விசாரித்துள்ளனர். அப்போது அவர் சொன்ன பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளது.


இதனால் அந்த பொடியை பறிமுதல் செய்து திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் சோதனைக்காக போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு அதை சோதனை செய்து பார்த்தபோது அது கொகைன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வட சென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் போதைப் பொருள் விற்பனை செய்யும் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

ராஜேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் ராயபுரத்தை சேர்ந்த காதர் மைதீன், மண்ணடியைச் சேர்ந்த முகமது அசாருதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய 26 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், விலை உயர்ந்த ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள், 5 கைபேசிகள், போதைப்பொருளை துல்லியமாக எடைபோட பயன்படுத்தும் அதிநவீன எலக்ட்ரானிக் தராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், யாருக்கும் சந்தேகம் வராமல் விலை உயர்ந்த காரில் சென்று, காரில் இருந்தபடியே போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் போதை பொருளை எம்ஜே, ஐஸ் என்ற புனை பெயரில் கல்லூரி மாணவர்களுக்கும், வசதி படைத்த இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்த போதைப்பொருள் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்