Home /News /tamil-nadu /

15 அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கு... சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

15 அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கு... சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Chennai High Court : மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வது குறித்தும் மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2ஆம் தேதி அன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர், செயல் அலுவலர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மார்ச் 4 ஆம் தேதி முற்பகல் 9.30 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூட்டப்பட்டு அன்றைய தினமே மேற்படி தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு போட்டி இருப்பின் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த 19ஆம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4ஆம் தேதி நடக்க உள்ள மறைமுக தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் எனவும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை எனவும் விளக்கமளித்தார்.

    இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராவில் ஆடியோ பதிவாகாது என்பதால், வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை கடத்தியதாக மனுதாரருக்கு எதிராக புகார் உள்ளதாகவும், அது குறித்து வழக்கு பதிந்துள்ளதாகவும், எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

    Read More : உக்ரைன் நாட்டு ‘அஞ்சா நெஞ்சர்’... நாடக நடிகர் டூ அதிபர்: யார் இந்த ஜெலன்ஸ்கி?

    இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை எனவும், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம் எனவும் நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, நீதிமன்ற உத்தரவின்படியும், தேர்தல் ஆணைய அறிவிப்பின் படியும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யப்பட்டதால், மறைமுக தேர்தலில் அதை மாற்ற வேண்டாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    Must Read : 12 ஆண்டுகள்.... 91 நாடுகள் பயணம்.. சொகுசு வாகனத்தில் மாமல்லபுரம் வந்த ஜெர்மன் தம்பதி...

    அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, Election Commission, Local Body Election 2022, Mayor

    அடுத்த செய்தி