விநாயகர் சதுர்த்தி : அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றம்

மத உரிமைகளை பின்பற்றுவதை விட வாழ்வாதர உரிமை முக்கியமானது என நீதிமன்றம் கருத்து.

 • Share this:
  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்படவும், ஊர்வலம் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என்றும், பொதுநலன் கருதியே அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்துள்ளது.

  சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

  மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் குறைந்தபட்சம் ஐந்து நபர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத உரிமைகளை பின்பற்றுவதை விட வாழ்வாதர உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

  இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு கட்டுப்பாடு விதத்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், இதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் எனவும் நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில் தெரிவித்திருந்தார்.

  Must Read : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு

  பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு தமிழகத்தைப் போலவே ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: