தங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெறும்வரை சின்ன
சேலம் பள்ளி மாணவி உடலுக்கு மறு உடற்கூறாய்வு செய்யும் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென்ற தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை
சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
எனினும் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே மாணவி மரணத்துக்கு நீதி வேண்டு நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர். இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலுக்கு மறு உடற் கூறாய்வு நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து நீதிபதி என். சதீஷ்குமார் இன்று காலை உத்தரவிட்டிருந்தார். இந்த குழுவில் தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்க கோரி நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் ராமலிங்கம் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் குற்றவியல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை இங்கு விசாரிக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமெனவும் கூறிவிட்டனர். இதையடுத்து நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையீடு வைத்த ராமலிங்கம் தரப்பு, மறுபிரேத பரிசோதனைக்கு தங்கள் தரப்பில் குறிப்பிடக்கூடிய மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும் எனவும், அதுவரை மறு உடற்கூறாய்வை நிறுத்தவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பிலும் வழக்கறிஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காலையில் பிறப்பித்த உத்தரவில் திருப்தி இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். வேண்டுமானால் சிபிசிஐடி-யிடமும்,அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடமும் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.. தமிழகம் அமைதி பூங்கா என்கிற நம்பிக்கையை புரட்டி போட்டுவிட்டதாக கருத்து
தங்கள் மருத்துவர் இடம்பெறாததால் அந்த உத்தரவில் திருப்தி இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதால், மறு உடற்கூறாய்வு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் மறு உடற்கூறாய்வு உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.