நடிகர் விஜய் குறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்க கோரி விஜய் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதியின் கருத்தை நீக்க உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காருக்கு இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் தெரிவித்தார்.
அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு முன்பு நடைபெற்றது.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களை பாராட்டித் தள்ளும் நடிகை கங்கனா ரனாவத்... பாலிவுட் மீது கடும் விமர்சனம்
அப்போது, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம். வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்த்வதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற் கருத்துக்கள் என்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது என்றும் நடிகர் விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
மேலும் படிங்க: பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் திடீர் சரண்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.