சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்: நியூஸ் 18 செய்தியின் எதிரொலியால் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் விரிவான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடர்ந்துள்ள நீதிபதி சுப்பிரமணியம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்: நியூஸ் 18 செய்தியின் எதிரொலியால் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்
  • News18
  • Last Updated: May 18, 2019, 10:28 AM IST
  • Share this:
தமிழகத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மறுதினம் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படுவதை களஆய்வு செய்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி விரிவான செய்தியை நேற்று வெளியிட்டது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவுசெய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக, சென்னை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில தனிநபர்கள் மிகப்பெரும் அளவில் நிலத்தடி நீரை திருடி, அதனை தண்ணீர் லாரிகளில் 5,000 ரூபாய் வரை விற்றுவருவதை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி விரிவான செய்தியாக வெளியிட்டதை குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்களை அளித்தபோதிலும், அதுகுறித்து போலீஸார் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டதையும் நீதிபதி நினைவு கூர்ந்துள்ளார்.

தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருப்பு


சென்னை நகரில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்களின், குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக செய்தியாளர்கள் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சுவதை அனுமதித்தால், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, விற்பனை செய்துவரும் நபர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில், சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

Chennai High Court | சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகப் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பொதுமக்கள் அளித்த புகார்கள் மீதும், நீர் திருடப்படுவது குறித்து செய்திகள் வெளியானபிறகும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

திருடப்படும் தண்ணீர்


எனவே, நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? தனியார் சொத்துக்கள் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து வரும் திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித் துறை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குநர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல, ஏரிகள்,விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்களிலிருந்து நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய நிலத்தடி நீரை எடுப்பதற்காக விவசாயத்திற்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்டவை குறித்தும் திங்கட்கிழமை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... SUPER EXCLUSIVE : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தண்ணீர் திருட்டு

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading