Home /News /tamil-nadu /

அரியலூர் மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியலூர் மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

அரியலூர் மாணவி நந்தினி கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மாயமானார். இதற்கிடையே, கீழமாளிகை கிராமத்தில் அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, மணிகண்டன், மணிவண்ணன், ராமச்சந்திரன், திருமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இந்த வழக்கை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரித்து வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி மாணவியின் தாயார் ((ராஜகிளி)) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க அரியலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி விசாரணை தொடங்கி 12 சாட்சிகள் விசாரிக்கப்படுள்ள நிலையில், மேலும் சில குற்றச்சாட்டுக்களை சேர்க்க அனுமதி கோரி இரும்புலிக்குறிச்சி காவல் ஆய்வாளர் தரப்பில் அங்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அனுமதித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை சேர்க்க உத்தரவிட்டது. அரியலூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்த வழக்கில் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

Also Read : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட உத்தரவு

அப்போது, பிற குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமுலத்தில் கூட்டுச்சதி என குறிப்பிடாத நிலையிலும், குற்றச்சாட்டுகள் வரையறுக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் குற்றச்சாட்டுகளை சேர்ப்பது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காந்திகுமார் வாதிட்டார். தடயங்களை அழித்ததாக மட்டுமே வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் கூட்டுச்சதி என குற்றச்சாட்டை சேர்ப்பது சட்டவிரோதம் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரியலூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதித்தும், காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Chennai High court, Madras High court

அடுத்த செய்தி