கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம் - உயர்நீதிமன்றம்

கிரிஜா வைத்தியநாதன்

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளது.

 • Share this:
  தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளது.

  தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதனை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்துள்ளதாக கூறி, அவரது நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

  இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும், நில நிர்வாக துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும், கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் விவகாரங்களை கவனித்து உள்ளதாக கூறி அது சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

  பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதற்கான குழுவின் தலைவராகவும், கூவம் நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும் கிரிஜா வைத்தியநாதன் செயல்பட்டுள்ளதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

  இதன் மூலம் அவர் பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சுற்றுச்சூழல் துறை சார்ந்த அனுபவங்களை பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாக கூறி, அவரது நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: