விவாகரத்து கேட்டு வந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன். இது எனக்கு முழு மனத்திருப்தியை அளிக்கிறது என்றும், டாஸ்மாக்கை மூட முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் பணியில் இருந்து ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பணியில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார். இன்று அரசு விடுமுறை என்பதால், அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றே வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், “என் தந்தை நடேசகவுண்டர் 4ஆம் வகுப்பு வரைதான் படித்தார். ஆனால், எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்தார். ஒருநாள் நீ மிகப்பெரிய ஆளாக வருவாய் என்று என்னை வாழ்த்தினார். அவர் செய்த கல்வி சேவையால், நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
மக்களின் கடைசி புகலிடம் இந்த நீதிமன்றம்தான். எனவே, வழக்கறிஞர்கள் சரியாக இருந்தால்தான், நீதித்துறை சிறப்பாக செயல்படும். இல்லை என்றால், நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் பலர் வழக்கறிஞர்கள். ஆனால், இப்போது வழக்கறிஞர் என்றாலே வீடும், பெண்ணும் கொடுக்க மறுக்கின்றனர். ஆகவே, ஒவ்வொரு இளம் வழக்கறிஞரும், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும்.
குடும்பநல வழக்குகளை நான் விசாரித்ததன் மூலம், விவாகரத்து கேட்டு வந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன். இது எனக்கு முழு மனத்திருப்தியை அளிக்கிறது. ஒற்றை பெற்றோர் கட்டுப்பாட்டின் கீழ் வளரும் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமானது. அந்த குழந்தைகளின் நடவடிக்கையே வித்தியாசமாக இருக்கும். அது மிகவும் பரிதாபத்திற்கு உரியது.
125 வயதுடைய உயர்நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். நான் வழக்குகளை மனசாட்சிப்படி விசாரித்து தீர்ப்பு வழங்கினேன். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது மனநிறைவை அளிக்கவில்லை.
ஆயினும், தமிழக அரசு மக்கள் நலன் கருதி படிப்படியாக மதுக்கடைகளை மூடி, தேசத்தந்தையின் கனவை நனவாக்க வேண்டும். மேலும், நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதால், உச்ச நிதிமன்ற கிளைகளை நாடு முழுவதும் உருவாக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். நான் நீதிபதியாக இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனாகவே வழக்குகளை விசாரித்தேன்.
என்னுடைய உத்தரவுகள் எல்லை தாண்டியதாக இருப்பதாகவும், நீதித்துறை கட்டப்பஞ்சாயத்து என்றும் சிலர் கூறுவர். ஆனால், சமுதாயம் மற்றும் மக்கள் நலனுக்காகவே நான் உத்தரவுகளை பிறப்பித்தேன். இது என் மனதில் ஊறிப்போனது. இதனால்தான் அடிக்கடி இரவு தூக்கத்தில் கூட நான் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக என் மனைவி கூறுவார்.” இவ்வாறு கூறினார் நெகிழ்ச்சியாக.
முன்னதாக, ஓய்வுபெறும் நீதிபதி கிருபாகரனை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடும்பிறை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1959ஆம் ஆண்டு கிருபாகரன் பிறந்தவர். இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியும் இவர்தான். பி.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டங்களை பெற்ற பின்னர், சட்டம் படித்து 1984ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் அபிபுல்லா பாஷாவிடம் ஜூனியராக சேர்ந்தார்.
Must Read : எந்த மொழியில் கடிதம் அனுப்பப் படுகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றவர், ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதனால்தான் இவரை மக்கள் நல நீதிபதி என்று அழைக்கின்றனர்” என்று பாரட்டி பேசினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வக்கீல் சங்க பிரதிநிதிகள், நீதிபதி கிருபாகரனின் 90 வயது தாயார் ராஜம்மாள், மனைவி எழில்பாவை மற்றும் மகள் பாக்யஸ்ரீ உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Retirement