• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது... தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுரை

தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது... தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுரை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதும், வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

  • Share this:
தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்து உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநிலதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரதான எதிர்கட்சியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும் கடந்த தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்று கூறிய அவர், இந்த அம்சங்கள் பற்றி  மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் கிராமங்களில் வீடியோ பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற் கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை பதில் அளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.

Must Read : உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நடைபெற்ற கலவரம் போல் மீண்டும் நடைபெற கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்ததாக வழக்கு தொடர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: