கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தது.
இந்நிலையில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. வான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அதில், ஓபிஎஸ் தரப்பை கட்சியிலிருந்து நீக்கியது என்பது கட்சி கட்டுப்பாடுகளை மீறிய செயல் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிக்க : ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்.. நிர்வாகம் புது உத்தரவு!
பொதுக்குழுவின் இந்த முடிவுகள் கட்சி நிறுவனர் எம்.ஜி ஆரின் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும், அதனால் ஜூலை 11 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காமல் நீக்கியது சட்டவிரோதம் என்றும், கட்சியிலிருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் குரு கிருஷ்ணகுமார் விளக்கம் அளித்தார். தங்களை நீக்குவது தொடர்பான எந்த அஜெண்டாவும் பொதுக்குழுவில் இல்லை என்றும், இயற்கை நீதிக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு நிலுவையில் தான் உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 23ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, நீக்கத்தை எதிர்த்து இந்த உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு முடிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்த வழக்கு செல்லாதது என எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதாகவும், அதனால் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனோஜ் பாண்டியன் தரப்பில்வாதிடப்பட்டது.
கட்சி விதிகளின்படி, கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார். மேலும் 2021 டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது என்றும், கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், அதனால் தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், சி.எஸ்.வைத்தியநாதன் அகியோர் ஆஜராகி கடந்த 9 மாதங்களாக இதே வாதங்களைத்தான் ஓ பி.எஸ். தரப்பினர் முன்வைப்பதாகவும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவும், பதிலளிக்கவும் 2 வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என்று கூறியதுடன், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் அறிவிக்க உள்ளதாக மனோஜ் பாண்டியன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு விளக்கங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, வழக்கு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை, மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai High court, Edappadi Palaniswami, Madras High court, O Pannerselvam