தமிழகத்தில் ஊழல் தடுப்புப்பிரிவு செயலற்று உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை உயர்நீதிமன்றம்

மாநிலத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் செயலற்று உள்ளது. இதனால் மாநகராட்சி ஊழல் தடுப்பு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு செயலற்று இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல் புகாருக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒற்றை நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாநகராட்சி ஆணையர் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மாநகராட்சி ஊழல் தடுப்புப் பிரிவில் ஒரு டிஎஸ்பி மற்றும் 2 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சத்தியநாராயணன், உயர்நீதிமன்றத்தில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவில் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மாநகராட்சியில், சட்டவிரோத கட்டுமானம் குறித்து ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் ஊழல் கண்காணிப்பு பிரிவு செயலற்று இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதுவதோடு ஊழல் தடுப்பு ஆணையம் நின்றுவிடுவதாக தெரிவித்தார். எனினும், ஒற்றை நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்த நீதிபதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டனர்.

Also see... புத்தகங்களின் எடை குறைப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி!
Published by:Vaijayanthi S
First published: