போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை சோளிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார பத்திரம் தயார் செய்யப்பட்டு, அந்த நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில் போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால், அதை விசாரித்து, போலியா என கண்டறிந்து, அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின்படி, சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும் சட்டத் திருத்ததுக்கு பின் அளித்த 2வது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சொத்துக்கள் மோசடியாக எப்படி அபகரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோன்ற செயல்களை தடுக்க உயர்நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Land Documents, Tamilnadu government