பொது அமைதியை குலைக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரிய பா.ஜ.க நிர்வாகி வினோஜ் பி. செல்வத்தின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பா.ஜ.க இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இருசமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.வினோஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி இந்து முன்னணி கண்டனத்தை செய்தியாக வெளியிட்ட தினமலர் செய்தியை மேற்கோள் காட்டி மட்டுமே ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டையும் தேர்தல் பிரச்சாரமாகவும் செய்துள்ளார் எனவும், அவரது பதிவிற்கு அவரது ஃபாலோயர்கள் கருத்து தெரிவித்ததையும் கவனத்தில் கொண்டே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளுடன் மதத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து வினோஜ் பி. செல்வத்தின் முன் ஜாமீன் மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.