விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...! கடும் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...! கடும் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல்
  • News18
  • Last Updated: January 20, 2020, 8:07 AM IST
  • Share this:
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்பியதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள், தங்களது சொந்த ஊரில் கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், பண்டிகை முடிந்து வருபவர்களுக்காக நேற்று முன் தினம் முதல் அதே அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பண்டிகை விடுமுறையுடன் வார விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், சொந்த ஊர்களில் இருந்து லட்சக்கணக்கானோர் நேற்று காலையில் இருந்தே சென்னை திரும்பினர். இதன் காரணமாக, சென்னை நகர எல்லையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வேலூர் மார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை இரவு வரை குறைவாக இருந்தது. இதனால், வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்கள் எளிதில் கடந்து சென்றன. அதிகாலையில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து முடங்கியது. இதன்காரணமாக வழக்கமான நேரத்தைவிட சென்னை வந்துசேர கூடுதல் நேரமானதாக பயணிகள் கவலை தெரிவித்தனர். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு விடிய விடிய மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

வேலூர் உட்பட பல்வேறு நகரங்களில் சுங்கச்சாவடிகளில் விரைவாக செல்ல வசதியாக கட்டணம் பெறாமல் இலவசமாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் விரைவாக சென்றன.நெல்லையில் பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று காலை முதலே ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட்டனர். தனியார் பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், அனந்தபுரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியதால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னைக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இரவில் நேரம் செல்ல செல்ல கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரம், சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி பயணித்தனர்.

இதேபோன்று, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மூலம் சென்னை திரும்பியதால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்