சென்னையில் நிலத்தடி நீர் சரிவு : இந்த கோடையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்

சென்னையில் நிலத்தடி நீர் சரிவு : இந்த கோடையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்

மழை

சரியான மழை பெய்யாமல் போனதன் காரணமாகவும், குழாய் விநியோகம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் முறை ஓரளவு அதிகரித்திருப்பதன் காரணமாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை லேசான சரிவை பதிவு செய்துள்ளது. அநேக இடங்களில் சரியான மழை பெய்யாமல் போனதன் காரணமாகவும், குழாய் விநியோகம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் முறை ஓரளவு அதிகரித்திருப்பதன் காரணமாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளில் குடிநீர் வாரிய கண்காணிப்பு கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதாந்திர அளவீடுகளின் அடிப்படையில், நிலத்தடி நீர்மட்டம் 1 அடி முதல் 1.25 அடி வரை குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று மெட்ரோவாட்டர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அந்த அளவீடுகளின்படி, தேனாம்பேட்டையில் நிலத்ததடி நீர்மட்டம் 0.88 மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது இங்கு தான் அதிக அளவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதையடுத்து, திருவெற்றியூரில் 0.79 மீட்டரும், அடையாரில் 0.77 மீட்டர் ஆழத்திற்கு நீர்மட்டம் குறைந்துள்ளது. இதையடுத்து பெருங்குடியில் 0.27 மீட்டர், திரு.வி.கா நகரில் 0.34 மீட்டர், அம்பத்தூரில் 0.35 மீட்டர் அளவு நீர்மட்டம் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை இயல்பை விட அதிகமாக இருந்தது. அக்டோபரில் 28 செ.மீ மழை பெய்தது, நவம்பரில் 14 செ.மீ மட்டுமே மழை பெய்தது, ஆனால் டிசம்பரில் 21 செ.மீ மழை பெய்தது மற்றும் கார்ப்பரேஷனின் அனைத்து 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் அட்டவணை அதிகரித்தது. அதேபோல, கடந்த ஜனவரி மாதம் வழக்கத்தைவிட சுமார் 9 மடங்கு அதிகமாக மழை பெய்தும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஜனவரி மாதத்தில் வழக்கமாக 22 மிமீ மழை பதிவாகும். ஆனால் கடந்த மாதம் 194 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேளச்சேரி, ராம்நகர், சாந்தோம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, பெரும்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து காணப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அந்த அளவுக்கு மழை பெய்திருந்தாலும் சென்னை நகரின் நீர்மட்டம்,கடந்த டிசம்பர் மாத அளவை விட குறைந்திருப்பது மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உறைந்துள்ளனர்.
Published by:Ram Sankar
First published: