தொடர் மழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3.90 மீட்டரில் இருந்த நீர் மட்டம், கடந்த ஜூன் மாதத்தில் 5.56 மீட்டருக்கு குறைந்து, டிசம்பரில் 3.13 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. மணலி மண்டலத்தில் ஓராண்டில் 3.45 மீட்டரிலிருந்து 2.25 மீட்டருக்கு அதிகரித்துள்ளது.
மாதவரம் மண்டலத்தில் 2019 டிசம்பரில் 4.60 மீட்டரில் இருந்த நீர் மட்டம், இந்தாண்டு டிசம்பரில் 3.30 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4.67 மீட்டருக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் 6.27 மீட்டரில் இருந்த நீர் மட்டம், இந்தாண்டில் கூடுதலாக 1.63 மீட்டர் அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர் மண்டலத்தில் ஓராண்டில் 2.8 மீட்டர் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
அம்பத்தூர் மண்டலத்தில் 2019 டிசம்பரில் 4.54 மீட்டரில் இருந்த நீர் மட்டம், இந்தாண்டு 3.46 மீட்டருக்கு அதிகரித்துள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் ஓராண்டில் 1.63 மீட்டர் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 2019 டிசம்பரில் 4.66 மீட்டராக இருந்த நீர் மட்டம், இந்தாண்டு டிசம்பரில் 2.52 மீட்டருக்கு உயர்ந்துள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்தில் ஓராண்டில் 2.55 மீட்டர் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 5.00 மீட்டரில் இருந்த நீர் மட்டம், இந்தாண்டு 2.10 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் 2019 டிசம்பரில் 4.05 மீட்டராக இருந்த நீர் மட்டம், இந்தாண்டு ஜூனில் 7.00 மீட்டருக்கு குறைந்து, டிசம்பரில் 1.83 மீட்டராக உயர்ந்துள்ளது.
அடையாறு மண்டலத்தில் ஒரு ஆண்டில் 2.41 மீட்டர் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. பெருங்குடி மண்டலத்தில் கடந்த ஆண்டில் 3.15 மீட்டராக இருந்த நீர் மட்டம், இந்தாண்டு 1.75 அடியாக உயர்ந்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2019 டிசம்பரில் 2.68 மீட்டரில் இருந்த நீர் மட்டம், இந்தாண்டு கூடுதலாக 1.22 மீட்டர் அதிகரித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்