• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: 3 பேருந்துகள் எரிந்து நாசம்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: 3 பேருந்துகள் எரிந்து நாசம்

Youtube Video

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளில் இன்டர்சிட்டி ட்ராவல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தில் மதியம் 12.30 மணியளவில் தீ பிடித்துள்ளது.

உடனடியாக சம்பவத்தை பார்த்தவர்கள்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அம்பத்தூர், ஜே ஜே நகர், அசோக் நகர், எழும்பூர், கோயம்பேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதற்குள் தீயானது அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் பற்றி மூன்று பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. மேலும் இரண்டு பேருந்துகள் லேசாக தீப்பற்ற ஆரம்பித்தது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அருகிலிருந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் போக்குவரத்து வடக்கு இணை ஆணையர் பாண்டியன், தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி தென்னரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த தீ விபத்தில் இன்டர் சிட்டி டிராவல்ஸ், பாரி ட்ராவல்ஸ், ஜெயம் முருகன் ட்ராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும் பாரி ட்ராவல்ஸ் மற்றும் யுனிவர்சல் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் லேசான தீ விபத்துக்கு உள்ளாகியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோயம்பேடு பேருந்து நிலைய வளாக காவல் துறையினர் நான்கைந்து மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் ஆகி விபத்து ஏற்பட்டதா? அல்லது கஞ்சா மற்றும் போதை பொருள் பயன்படுத்தும் நபர்களால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: