• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்குகள்: பல லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநிலத்தவர்கள் கைது

ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்குகள்: பல லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநிலத்தவர்கள் கைது

மோசடியில் ஈடுபட்ட நபர்கள்.

மோசடியில் ஈடுபட்ட நபர்கள்.

ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கி பல லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி அவர்களின் நட்புப் பட்டியலிலுள்ள நபர்களிடம் அவசரத் தேவையாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறிய சிறிய தொகை கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் தினகரன், ஏ.டி.ஜி.பி ரவி, ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெயரிலேயே முகநூல் கணக்குகள் தொடங்கி மோசடியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த மோசடி செயலில் ஈடுபடுவது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது. எனினும், கொரோனா காலம் என்பதால் மாநிலம் விட்டு மாநிலம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்வதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முஷ்டக்கின் கான், ஷகில் கான் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Also read: அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 200 கோடி ரூபாய் ஊழல் புகார் - விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

விசாரணையில் பலருக்கும் தெரிந்த ஒரு நபரை நோட்டமிட்டு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைத் திருடி அவர்களது பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி, அவர்கள் பக்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நட்பு அழைப்பு கொடுத்து அதன் பிறகு அவசரத் தேவை என மோசடி செய்தது தெரியவந்தது. அதேபோல, பல பிரபலங்களின் முகநூல் பக்கங்களை ஹேக் செய்தும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுப்பட்ட ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம், கேத்வாடா, சாசன் மற்றும் லேபுரா கிராமங்களைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அடிப்படையில் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் இவர்களுக்கு முகநூலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துகூட தெரியாது. ஆனால் இவர்களுக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நபர், மூளையாகச் செயல்பட்டு முகநூலை ஹேக் செய்தல், போலி சமூகவலதளப் பக்கம் உருவாக்கி அதன் மூலம் மோசடி செய்வது எப்படி என கற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும் முகநூல் பக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக ஹாக் செய்யாமல் ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மாநிலங்களில் செல்போன் எண்களின் கடைசி ஐந்து எண்களை பாஸ்வேர்டாக பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால் அதை பயன்படுத்தி முகநூலை ஹேக் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த இளைஞர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் கூகுள் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை டைப் செய்து முகநூல் மெசஞ்சரில் அனுப்பி பணம் கேட்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது.



மேலும், இவர்கள் முழுக்கமுழுக்க கூகுள் பே, போன் பே போன்ற போன்ற செயலிகள் மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்யச் சொல்வதால் அடுத்தடுத்த போன் நம்பர்களுக்கு பணத்தை அனுப்பி வங்கிகளில் இருந்து உடனடியாக ஏ.டி.எம் மெஷினைப் பயன்படுத்தி பணமாக எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு போன் நம்பர்கள் அதிகம் இந்த மோசடியில் தொடர்புபடுவதால் செல்போன் சிக்னல் மூலமாகவே இவர்களை அடையாளம் கண்டு கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முஸ்டக்கின் கான் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி பெயரில் முகநூல் கணக்கு உருவாக்கி தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டவர். பின்னர், தெலுங்கானா போலீசார் உதவியுடன் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முஷ்டக்கின் கானை ராஜஸ்தான் மாநிலம் அழைத்துச் சென்று ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்து ஷகில் கான் மற்றும் ரவீந்திரநாத் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் பெயரிலேயே போலி கணக்கு தொடங்கியது ஷகீல் கான் என்பதும் அதை பணமாக எடுத்துக்கொடுக்க உதவியது ரவீந்திரநாத் என்பதும் தெரியவந்துள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெயரில் முகநூல் கணக்கு உருவாக்கி அதன்மூலம் பல லட்சங்களை இவர்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சைபர் கிரைம் போலீசார் மூவரையும் சிறையிலடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: