போலி கால் சென்டர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் கும்பல்... இரண்டு நாட்களில் 7 பேர் கைது

சென்னையில் கொரோனா காலத்தில் தனிநபர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலி கால் சென்டர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் கும்பல்... இரண்டு நாட்களில் 7 பேர் கைது
மாதிரி படம்
  • Share this:
சென்னையில் கடந்த சில மாதங்களாக போலி கால் சென்டர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது வாடிக்கையாகி வருகிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து பல போலி கால் சென்டர் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர் கட்டடத்தில் பென்ஸ் கிளப்பிற்கு சொந்தமான இடத்தில் போலி கால் சென்டர் நடத்திய கும்பலை, கடந்த மார்ச் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன் மற்றும் விசிக நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட செல்வகுமார் என்பவரே மூளையாக செயல்பட்டு பல போலி கால் சென்டர்களை சென்னையில் நடத்தியது விசாரணையில் அம்பலமானது.


அந்த அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் நடத்திய தொடர் விசாரணையில், பெருங்குடி மற்றும் திருவான்மியூரில் செல்வகுமாரின் கூட்டாளிகள் சிலர் தற்போது வரை போலி கால் சென்டர் நடத்தி வந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள எல்பி சாலையிலும், பெருங்குடியிலும் போலி கால் சென்டர்களை நடத்தி பலரையும் ஏமாற்றிய கோபிநாத், தியாகராஜன், மணி பாலா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி கும்பல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை பயன்படுத்தி பெண்களை வைத்து பலரையும் ஏமாற்றியது தெரிய வந்தது.

Also see:

கொரோனா காலத்தில் பணத்துக்காக கஷ்டப்படும் நபர்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி அவர்களது ஆவணங்களை பெற்று, கையில் வைத்திருக்கும் சிறுசேமிப்பு பணத்தையும் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கைதான தியாகராஜன் என்பவர் ஏற்கெனவே சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்தி சிக்கிய கும்பலோடு தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணா சாலையில் போலி கால் சென்டர் நடத்திய விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட செல்வகுமாருக்கு கூட்டாளிகளாக செயல்பட்ட மேலும் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், ராஜ்குமார், ஜாவித், முகமது ஜாகீர்கான் ஆகியோரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி கால்சென்டர் விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டதில் இரண்டு நாட்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் பொது மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் போலி கால் சென்டர் கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கடன் வாங்கித் தருவதாக பேசும் நபர்களை நம்பி அசல் ஆவணங்களை தர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading