பெண்களின் ப்ரொஃபைல் படங்களைப்போட்டு பாலியல் தொழில் விளம்பரம்.. 200 ரூபாய் மட்டும் வசூலித்த ஃபேக் ஐடி ரோமியோ.. சிக்கியது எப்படி?

Youtube Video

3 ஆண்டுகளாக முகநூலில் பெண்களின் படங்களுடன் போலி கணக்குகளை உருவாக்கி பாலியல் தொழில் என சித்திரித்து, சிக்குவோரிடம் 200 ரூபாய் மட்டும் வசூலித்த ஃபேக் ஐடி ரோமியோ போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்தவர், சைபர் குற்றவாளியாக மாறியது எப்படி? 

 • Share this:
  கார்களில் மாற்று ஓட்டுநராக பணிபுரிந்து வந்த சரத்குமார், முகநுால் போலி கணக்குகள் மூலம் பணம் வசூலிப்பதை பகுதி நேர வேலையாகவே செய்து வந்துள்ளார். அதிகம் வசூலித்தால் சிக்கி விடுவோம் என திட்டமிட்டு 200 ரூபாய் மட்டும் வசூலித்தவர் சிக்கியது எப்படி?

  சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படம், ராம் சிவக்குமார் குமார் என்ற முகநூல் பக்கத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதாக அவரது கணவருக்குத் தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர், அந்த முகநூல் பக்கத்தில் பார்த்தபோது அவரது மனைவியின் புகைப்படத்தைப் பதிவிட்டு பாலியல் தொழிலுக்கு  தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

  உடனடியாக அவர் சங்கர் நகர் போலீசாரிடம் புகாரளித்தார். போலீசார் அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு ஒரு பெண்ணின் செல்போன் எண் வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலம் கேட்டுள்ளனர். முகநூல் பதிவரும் ஒரு வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி அதில், 200 ரூபாய் அனுப்பும்படியும் பணம் வந்த உடன் எண் தருவதாகவும் பதிலளித்தார்.

  போலீசாரும் அந்த வங்கிக் கணக்கில் 200 ரூபாய் பணத்தை அனுப்பி விட்டு ஸ்க்ரீன் ஷாட்டை அந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினர். அடுத்த நொடி, போலீசாரின் எண்ணை அந்த மர்ம நபர் பிளாக் செய்துள்ளார்.

  அதனால்,  வங்கி கணக்கை வைத்து போலீசார் விசாரித்தபோது, அந்த நபர் மணப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த 29 வயதான சரத்குமார் என்பதும் அவர் ஆக்டிங் டிரைவராகப் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. சரத்குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக,  முகநூலில் பல கணக்குகளை போலியாக உருவாக்கி, அவற்றில் முகநூல் கணக்கு வைத்துள்ள பெண்களின் உண்மையான புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அந்தப் படங்களுடன் பாலியல் தொழில் எனக் குறிப்பிட்டு தனது வாட்ஸ் ஆப் எண்ணையும் கொடுத்துள்ளார்.

  அந்த எண்ணைத் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு தனது வங்கிக் கணக்கில் 200 ரூபாய் அனுப்பினால் பெண்களின் தொடர்பு எண் தருவதாக ஆசை காட்டுவார். சிக்கிய நபர்கள் 200 ரூபாயை அனுப்பிய உடன் அவர்களின் தொடர்பு எண்களை பிளாக் செய்து விட்டுத் தப்பி விடுவார். சரத்குமாரின் முகநூல் பதிவுகளில், பாதிக்கப்பட்ட பலர், இது ஒரு ஃபேக் ஐடி என்றும், ஏமாற்றுபவர் என்றும் வசைபாடியுள்ளனர். பெரிய தொகையாக வசூலித்தால் எளிதில் சிக்கி விடுவோம் என திட்டமிட்டு 200 ரூபாய் மட்டுமே பலரிடம் வசூலித்துள்ளார் சரத்குமார். இதனையடுத்து  மன உளைச்சல் ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த  சங்கர் நகர் போலீசார், சரத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது அவற்றில் அந்தரங்க தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் போலீசார்.
  Published by:Vaijayanthi S
  First published: