சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்த நிலையில், அவர் சாப்பிட்ட சிக்கன் காரணமாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி சேர்ந்த ரஞ்சித்( 22) பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் நேற்று இரவு பெரம்பூர் பிபி சாலையில் உள்ள நண்பர் கிரிதரனுடைய மருந்தகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் சாப்பிட்டுள்ளனர்.
அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்ற நிலையில், ரஞ்சித் வீட்டிற்குச் சென்று இரவு 10 மணியளவில் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றது என்று அண்ணனிடம் தெரிவித்தார். இதனையடுத்து வாந்தி எடுத்த நிலையில் உடனே அவரது அண்ணன் ரஞ்சித்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார்.
மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்..அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர் இதனால் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர்- அசோக்
மேலும் படிங்க: மாணவியிடம் அமைப்புகள் வாக்குமூலம் பெற்றது தவறு..அமைச்சர் அன்பில் மகேஷ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.