15 நிமிடத்தில் ரூ.74,000 பணத்துடன் பேக்கை மீட்டனர் - சென்னை காவல்துறை குறித்து உணவகத்தில் பேக்கைத் தவறவிட்ட இளைஞர் உருக்கம்

பேக்கைத் தவறவிட்டவர்

சென்னையில் பேக்கைத் தவறவிட்ட நிலையில் காவல்துறையினர் 15 நிமிடத்தில் மீட்டுக்கொடுத்தனர் என்று இளைஞர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன். பட்டதாரி இளைஞரான இவர் ஜியோ டெக்னோவேளி சொல்யூஷன் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அலுவல் காரணங்களுக்காக நேற்று சென்னை வந்துள்ளார். அலுவல் பணியை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பும் போது நேற்று இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் உணவருந்தியுள்ளார். பின்னர் உணவருந்திவிட்டு மீண்டும் அங்கிருந்து கார் மூலம் சேலம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இரவு 11 மணியளவில் கார் சரியாக உளுந்தூர்பேட்டையை கடந்து சென்ற போது தான் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய பேக்கை ஞாபக மறதியில் உணவகத்திலேயே விட்டுச் சென்றது நினைவிற்கு வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்வேஸ்வரன் இணையத்தில் சைதாபேட்டை காவல் நிலைய எண்ணைத் தேடி பின்னர் சைதாபேட்டை காவல் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்து அதனை மீட்கும்படி கூறியுள்ளார். 15 நிமிடங்களுக்குள் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து உணவகத்துக்கு சென்றுள்ளனர். அங்கு உணவக ஊழியர்களிடம் விவரத்தைக்கூற அனைவரும் பேக்கைத் தேட அந்த பை உணவகத்தில் சர்வேஷ்வரன் விட்டு சென்ற இடத்திலேயே இருப்பது தெரியவந்தது. பேக் மீட்கப்பட்ட விவரத்தை போலீசார் சர்வேஷனிடம் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பணம்


தனது பேக்கை பத்திரமாக மீட்கப்பட்டதையறிந்த அவர், இன்று அதிகாலை மீண்டும் சென்னை வந்து தனது அடையாள அட்டைகள், பேக்கில் இருந்த உடைமைகளின் விவரங்களை தெரிவித்தார். அதனடிப்படையில் பேக்கில் இருந்த 74,110 ரூபாய் ரொக்கப்பணம், ஆப்பிள் டேப் மற்றும் இதர உடமைகளும் சர்வேஸ்வரனிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சர்வேஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே தனது உடமைகள் எதுவும் தொலையாமல் பத்திரமாக காவல் துறையினர் மீட்டு கொடுத்ததாகவும், மேலும் தான் சென்னை வந்தபோது, காவல் நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வே வரவில்லை நெருங்கிய உறவினர் வீட்டில் இருப்பது போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காவலர்கள் தன்னிடம் ஜூஸ் வாங்கி கொடுத்து மிகவும் அன்பான வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்த அவர் புகார் கொடுக்காமல் போனில் மட்டுமே தகவல் தெரிவித்தபோதும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு தனது உடைமைகளை பத்திரமாக மீட்டு கொடுத்ததாகவும் இதை சற்றும் தான் நினைத்துப் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாரோ ஒரு காவலர் செய்யும் தவறுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணம் உருவாகி உள்ளது. ஆனால், உண்மையில் காவலர்கள் நமது நண்பர்களே! என்று குறிப்பிட்ட அவர் இதுவரை எதிரிபோல் மனதில் தோன்றிய காவலர்கள் தற்போது கண்களுக்கு கதாநாயகர்களாக தெரிகிறார்கள் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: