Home /News /tamil-nadu /

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைக்குமா? கிடைக்காதா?... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைக்குமா? கிடைக்காதா?... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்ட விவகாரம் இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட் விசாரணையை ஒத்திவைத்தார். விசாரணையின் முடிவில் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றிய முடிவு தெரியவரும் என்பதால் அதிமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே குவிந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோவை மேயர் ரேஸில் முந்தும் 3 கவுன்சிலர்கள்.. யாருக்கு வாய்ப்பு?


இதனிடையே தேர்தலன்று(19ம் தேதி) ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது மக்களின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுத்தல், தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்றுநோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட  சம்வத்தில் ஜெயக்குமாரை ஜார்ஜ் டவுன் 16வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராயபுரம் போலீசார் அழைத்து வந்தனர்.
இதனிடையே திமுக பிரமுகர் நரேஷ் மீது தாக்குதல் நடத்தி தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னரே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

15வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவசர விடுப்பில் இருந்ததால் 2 வழக்குகளும் 16-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் தயாளன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ராயபுரம் போலீசார் கைது சம்பவத்தில் மார்ச் மாதம் 9-ம் தேதி வரை ஜெயக்குமாரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் படிங்க: கரகாட்டக்காரன் பட பாணியில் சம்பவம்... பள்ளி பேருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..


இதனையடுத்து திமுக பிரமுகர் நரேஷ் மீது தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணையில், ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை போலீசார் வேண்டுமென்றே கொலை முயற்சி(307) வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மேலும் சிறையில் முதல் வகுப்பில் அடைக்காமல், சாதாரண வகுப்பில் அடைந்துள்ளதாகவும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் செல்வம் வாதிட்டார்.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் வீடியோவை சமர்ப்பித்து, "சாவடிங்கடா எனவும் “ சட்டையை கழட்டி கையை கட்டுங்கள் எனவும்" ஜெயக்குமார் தனது தொண்டர்களிடம் கூறியதாகவும் அதன் பேரிலேயே கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.



இதனை தொடர்ந்து திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்ட விவகாரம் இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட் விசாரணையை ஒத்திவைத்தார்.
விசாரணையின் முடிவில் தான் திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றிய முடிவு தெரியவரும் என்பதால் அதிமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே குவிந்துள்ளனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகும் தகவலை அறிந்த அவரது மகன் ஜெயவர்த்தனன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்து கோஷமிட்டதால், சென்னை காவல் வடக்கு இணை ஆணையர் ரம்ய பாரதி ஐ.பி.எஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: ADMK, Jayakumar

அடுத்த செய்தி