தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், குறிப்பாக
சென்னையில் கடந்த 6ஆம் தேதி இரவு முதல் கன
மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய காலகட்டத்தில் பருவமழை நேரங்களில் வந்தாரை வாழவைக்கும் ‘சென்னை’ பாதுகாப்பற்ற நகரமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக மழைப்பொழிவின் போது மழைநீர் வடிவதற்கு இடமின்றி குடியிருப்புகளை சூழ்ந்துக்கொள்கிறது. இதற்கு யார் காரணம்? சென்னையில் பெருகிய மக்கள் தொகையால் பல பகுதிகள் இன்று வீடுகளாகவும் குடியிருப்புகளாகவும் தொழில்நுட்ப பூங்காக்களாகவும் மாறிவிட்டன.

சென்னை
சென்னையில் வேளச்சேரி போன்ற சில பகுதிகள் ஏரிகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டதால் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் பருவமழை காலங்களில் சொல்லவே தேவையில்லை. காலநிலை மாற்றத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ‘இந்த பிரச்சனையே முதலில் அரசு கட்டமைப்பின் மீதுதான் உள்ளது. டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) ஆகியவை தமிழ்நாட்டில் நில அமைப்புக்கான அனுமதிகளை வழங்கும் நோடல் ஏஜென்சிகளாகும். ஒரு சாமானியனுக்கு என்ன தெரியும்? சிஎம்டிஏ, டிடிசிபி அனுமதி பெற்ற நிலங்கள் என விளம்பரங்கள் வரும்போது அதனை நம்பி வாங்கும் மக்களை எப்படி குறை சொல்ல முடியும்? தனிப்பட்ட நபராக எப்படி ஒருவர் இதற்கு பொறுப்பேற்க முடியும்? ஆகவே, அரசு கட்டமைப்பில்தான் பிரச்சனை. நகரங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு மழைப்பொழிவுதான் காரணமா என்றால் அது நிச்சயம் கிடையாது’, என்றார்.

சென்னை
Must Read | தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்... கடும் மழை எச்சரிக்கை... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
இனிவரும் காலங்களில் பெருவெள்ளத்தை தடுப்பதற்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில், எங்கெங்கெல்லாம் இயற்கை நீர்நிலைகளை மீட்டெடுக்க முடியுமோ அங்கெல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இரண்டாவதாக, அதீத கனமழை நேரங்களை சமாளிக்க Storm drains எனும் துளை முறையை அரசு கண்டிப்பாக வடிவமைக்க வேண்டும். அதற்கு முன்னர், சென்னை நகரின் elevation மேப்பை வடிவமைக்க வேண்டும். ஏனெனில், அந்த elevation மேப் இல்லாமல் நகரில் எங்கு மேடு உள்ளது, எங்கு பள்ளம் உள்ளது என்பது தெரியாது. அதற்கு தகுந்தார் போல் மேப்பை வடிவமைத்து Storm drains முறையை செயல்படுத்த வேண்டும். ஒரு பொது வடிவமைப்பை வைத்துக்கொண்டு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான Storm drains அமைப்பது சரியாக இருக்காது. மேலும், Storm drains-ல் சேரும் நீர் அனைத்தும் நதியில் சென்று கலக்க வேண்டும் என்பதில்லை. ஆங்காங்கே சிறு சிறு நீர்த்தேங்களை கட்டி நீரை சேர்க்கலாம். இதெல்லாம் செய்தாலே போதும். நம் கட்டமைப்பு சரியாக இருந்தால் எந்த மாதிரியான மழையையும் தாங்கிவிடலாம். ஒரு சாதாரண மழைநீரை கையாள முடியவில்லை என்றால் தமிழகத்தை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதில் அர்த்தமில்லை. 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு இருந்த பள்ளிக்கரணை இப்போது வெறும் 600 ஏக்கர் மட்டும்தான் உள்ளது. நீர்நிலையங்களையும், நீர்வழித்தடங்களையும், சதுப்பு நிலங்களையும் ஆக்கிரமித்து நீர் வடிய வழியில்லாமல் தடுத்த மனிதனின் தவறுதான் வெள்ளப்பெருக்குக்கு காரணம், என்றார் சுந்தர்ராஜன்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.