ஆப்கானிஸ்தானிலிருந்து மிரட்டல்: இண்டர்போல் கொடுத்த தகவல்- சென்னை ஸ்டார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த பின்னணி

மாதிரிப் படம்

இந்தியா உட்பட 3 நாடுகளைச் சேர்ந்த 8 நகரங்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள சூழலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் உலக நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் பணியாற்றுவதற்கான மருத்துவர் தகுதித் தேர்வு இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த தேர்வு நடைபெறும் நகரங்களில், அந்தந்த தேர்வு மையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த தகவல் இண்டர்போல் போலீசார் மூலம் அந்தந்த மாநகர காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த மின்னஞ்சலில் "ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழலில் தங்கள் நாட்டிற்கு உதவிகள் புரியாத இங்கிலாந்து நாட்டை பழிவாங்கும் அடிப்படையிலேயே இதைச் செய்வதாகவும், உலகமே மருத்துவர்களை எதிர்பார்த்து நிற்கும் இச்சூழலில் இங்கிலாந்து நாட்டிற்கு மருத்துவர்கள் கிடைக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "இங்கிலாந்தில் பணியாற்ற உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மருத்துவர் தகுதித் தேர்வு மையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் எனவும் எங்களைத் தடுக்க முயலாதீர்கள், முயன்றாலும் முடியாது" எனவும் மேலும், "நாங்கள் வெற்றி அடைவோம்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் புது டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களிலும், வங்க தேசத்திலுள்ள தாக்கா, ஸ்ரீலங்காவிலுள்ள கொழும்பு ஆகிய 8 நகரங்களில் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளதாக இண்டர்போல் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னையில் தேர்வு மையங்களான ரேடிசன் ப்ளூ, தாஜ் கன்னிமாரா, ரமடா உட்பட 6 நட்சத்திர ஹோட்டல்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்னும் இரண்டு தினங்களில் சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Karthick S
First published: