அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது அதிரடியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என தற்போது முன்னாள் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்தடுத்து அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது உறவினர்கள் நண்பர்கள் நிறுவன பங்கேற்பாளர்கள் என முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
69 இடங்களில் சோதனை
சென்னையில் 14 இடங்கள், வேலூர், சேலம் கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தன் பெயரிலும் தன் உறவினர்கள் பெயரிலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி செய்து சொத்துக்குவிப்பு?
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தந்தை பெருமாள் சிறிய அளவிலான டெக்ஸ்டைல் தொழில் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது தங்கமணிக்கு அதிக அளவில் சொத்துகள் இருப்பதாக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்கமனியின் மனைவி சாந்தி பெயரில் எந்தவித நிறுவனங்களும் நடைபெறவில்லை என்பதும், ஆனால் அவரது பெயரில் வருமானம் காட்டி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகன் தரணிதரன் ஆகியோர் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதும், இந்த மோசடிக்கு தங்கமணியின் மனைவி சாந்தி உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது ரூ.2 கோடிக்கும் குறைவாக காட்டப்பட்ட சொத்து மதிப்பானது அதன் பின்பு ரூ. 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விசாரணையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் Mantro Network pvt.Ltd என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்குநராக இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மெட்ராஸ் ரோட் லைன், ஜெயஸ்ரீ செராமிக், ஸ்ரீ பிளை அண்ட் வணீர், ஏ.ஜி.எஸ் டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக் மற்றும் ஸ்ரீ பிளைவுட், இன்ப்ரா ப்ளூ மெட்டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதே போல முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சம்மந்தியும், மருமகன் தினேஷ் குமாரின் தந்தையுமான சிவசுப்பிரமணியன் பெயரில் MRL Logistics என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் தங்கமணியின் மகளான லதா ஸ்ரீ பெயரில் ஜெயஸ்ரீ பிளைவுட் மற்றும் ஜெயஸ்ரீ பில்ட் புரோ என்ற பெயரில் நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்கள் கணக்கில் வராத பணத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதும். அவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Must Read : கர்ப்பிணியை 6 கி.மீ டோலிகட்டி சுமந்து வந்த மக்கள் - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்
சோதனை நடைபெறும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில் தான் முன்னாள் அமைச்சர் தங்கமனி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் சொத்து ஆவணங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.