சென்னையில் ரவுடி கும்பல் செய்த அட்டகாசம்... சிசிடிவி காட்சிகள் மூலம் தட்டி தூக்கிய போலீஸ்

Youtube Video

சென்னையில், மாமூல் கேட்டு தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் வெட்டிய ரவுடி கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முக்கிய குற்றவாளியான பிரதீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 

 • Share this:
  கடந்த மாதம் 21 ஆம் தேதி பா.ஜ.க எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநிலச் செயலாளர் பாலசந்தருக்கு பாதுகாவலராக தலைமைக் காவலர் வீரபுத்திரன் பணியாற்றினார். பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது. அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ரவுடிக் கும்பலை அழைத்து விசாரித்துள்ளார்.

  குடிபோதையில் இருந்த அந்த ரவுடிக்கும்பல், தலைமைக் காவலரை தகாத வார்த்தைகள் திட்டியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டலும் விடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் வீரபுத்திரன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

  சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார். மூன்று ரவுடிகள் காவலரை மிரட்டிய வீடியோ கிடைத்தது. இதைத் தொடர்ந்து மற்ற சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசாருக்கு பல பகீர் தகவல்கள் கிடைத்தன. காவலர் வீரபுத்திரனை மிரட்டிய சற்று நேரத்திற்கு முன்னதாக தனியார் நிறுவனம் ஒன்றில் புகுந்து, அதன் மேலாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  பணம் தர மறுத்தவரை கத்தியால் வெட்டிச் சென்றதும் சிசிடிவிகாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடி கும்பலில் தினேஷ், மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரை கைது செய்தனர்.

  அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான பிரதீப் பதுங்கி இருந்த இடம் குறித்து ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை பிரதீப்பை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.

  பிரதீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ரவுடி பிரதீப் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உட்பட 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  மேலும் படிக்க...  தேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்

  பிரதீப்பின் தந்தை தர்கா மோகன் பெரிய ரவுடியாக இருந்து வந்ததால் அவரைப் போல பெரிய ரவுடியாக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதீப் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தனது நீண்ட சிகை அலங்காரத்தை மாற்றி பிரதீப் சுற்றி வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமூல் கேட்டு கொடுக்காததால் தனியார் நிறுவன மேலாளர் சுரேஷை வெட்டியதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.

  படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷிடம் சித்தாதிரிப்பேட்டை போலீசார் புகார் பெற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  தொடர் கொள்ளை, பணம் பறித்தல், மிரட்டல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த ரவுடிக் கும்பல் பிடிபட்ட நிலையில், அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: