பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில்.. அச்சத்துடன் ஓடிய பயணிகள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில்.. அச்சத்துடன் ஓடிய பயணிகள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
ரயில் விபத்து வீடியோ
Train accident: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடை மீது மின்சார ரயில் ஏறி விபத்துக்குள்ளான விவகாரத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடை மீது ரயில் விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே பணிமனையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக, மின்சார ரயில் கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு நேற்று மாலை 4.25 மணிக்கு வந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில், தடுப்பு மீது மோதி நடைமேடை மீது ஏறியதுடன், நடைமேடைக்கு வெளியே இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நின்றது. ரயில் கட்டுப்பாட்டை இழந்ததும் எஞ்சின் பெட்டியில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்து தப்பினார்.
விபத்து நடந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ரயில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.ரயில் மோதி விபத்துக்குள்ளான நடைமேடை வழக்கமாக பயணிகள் கூட்டத்துடன் காணப்படும். விடுமுறை நாளான நேற்று குறைவான பயணிகளே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உடனடியாக மாற்று நடைமேடையில் இருந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான மின்சார ரயிலில் மொத்தம் எஞ்சினையும் சேர்த்து 12 பெட்டிகள் இருந்தன. 10 பெட்டிகள் உடனடியாக பிரித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மாலை 6.30 மணியளவில் நடைமேடை மீதேறிய பெட்டி மீட்கப்பட்டது. எனினும் என்ஜின் பெட்டி மேற்கூரையை இடித்து நின்றதால் அதை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அந்த பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றிவைத்து, வெளியே இழுத்த போது சக்கரம் நழுவி தண்டவாளத்திற்கு கீழே இறங்கியது.
.இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரில் சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உயிர்க்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 - மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் ரயில்வே சட்டம் பிரிவு 151, 154 ஆகிய மூன்று பிரிவுகளில் ஓட்டுநர் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.