• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஃபேசியலுக்கு மட்டும் ரூ.92,000: 3 நாட்களில் ரூ.5.50 லட்சம் செலவு... ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது

ஃபேசியலுக்கு மட்டும் ரூ.92,000: 3 நாட்களில் ரூ.5.50 லட்சம் செலவு... ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது

சென்னை திருட்டு

சென்னை திருட்டு

சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் 72 லட்ச ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் pondy oxides and chemicals ltd என்ற நிறுவனத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரூபாய் 72 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திராவில் கார் பேட்டரிகளுக்கு அமிலம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிஷ் பன்சால் என்பவர் தலைமை அலுவலகத்தை ஹாரிங்டன் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமை காலையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டும் லாக்கர் உடைக்கப்பட்டும் அதிலிருந்த ரூபாய் 72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அலுவலக மேலாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.

வழக்குப்பதிவு செய்த சேத்துப்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது செல்போன் எண் மூலம் கடந்த மூன்று நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் கொள்ளையன் சென்னை தி.நகரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து இன்று காலை அவரை கைது செய்தனர்.

கொள்ளையனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன்(57) என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து இவர் சென்னையின் பிரதான தொடர் கொள்ளையன் என்பதும் இவர் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் 21 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் 1992 ஆம் ஆண்டு எழும்பூர் போலீசார் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

2001ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் சென்னையை விட்டு வெளியேறி பிற மாவட்டங்களில் சிறுசிறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை வந்த இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராயல் லாட்ஜில் 18ஆம் தேதி அறை எடுத்து கொள்ளையடிப்பதற்காக தேனாம்பேட்டை, மயிலாப்பூர், பெரியமேடு, தி.நகர், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்களை நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த 8 ஆம் தேதி சேத்துப்பட்டு தனியார் வணிக வளாகத்தில் உள்ள pondy oxides and chemicals ltd என்ற நிறுவனத்தை நோட்டமிட்டு 9ம் தேதி மாலை அந்த நிறுவனத்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டதும் பின்னர் அனைவரும் அலுவலகத்தை பூட்டிச் சென்ற பின் ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்த லாக்கரை தான் கொண்டு சென்ற சுத்தியல் மற்றும் திருப்புளியால் உடைத்து ரூபாய் 72 லட்சம் பணத்தை குப்பை கொட்ட பயன்படுத்தப்படும் பாலத்தின் பேப்பரில் கட்டி பின்னர் கதவை உடைத்து தப்பி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த பின் திங்கள்கிழமை காலை திருவல்லிக்கேணியில் தான் தங்கியிருந்த லாட்ஜை காலி செய்து விட்டு அங்கிருந்து நேராக டி நகர் உள்ள ஜி.ஆர்.டி சொகுசு விடுதியில் தங்கி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் தான் கொள்ளையடித்த பணத்தில் ஈ.சி.ஆரில் ரூபாய் 55 லட்சத்திற்கு ஒரு வீட்டை பேரம் பேசி வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கொள்ளையடித்த பணத்தில் விலை உயர்ந்த உணவு, மதுபானங்கள் என 3 நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததுடன் மட்டுமல்லாமல் பிரபல அழகு நிலையத்தில் 92,000 ரூபாய்க்கு பேசியல் மற்றும் ஹேர் டை செய்துள்ளார். மூன்று நாட்களில் மட்டும் சொகுசாக வாழ ரூ.5.50 லட்சம் பணம் செலவழித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் மகள் திருமணம் முடிந்து சென்று விட்டதாலும் தனிமையில் இருந்த தான் சிறிது சிறிதாக கொள்ளையடித்து வாழ்வில் முன்னேற முடியவில்லை எனவும் அதனால்தான் நோட்டமிட்டு பெரிய அளவிலான தொகையை அடித்து செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து கொள்ளையடித்ததாகவும் தெரிவித்த அவர், இன்று மாலை தான் காரில் தப்பிச் செல்ல இருந்ததாகவும் இன்று ஒரு நாள் மட்டும் விட்டிருந்தால் தனது லட்சியத்தை அடைந்திருப்பேன்" எனக் திருட்டில் ஈடுபட்ட பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார். அப்போது அவர், போலீசாரை பார்த்து "அதுக்குள்ள அவசரப்பட்டு என்ன புடிச்சிட்டீங்களே சார்" என கூலாக கூறியபோது விசாரணை மேற்கொண்ட அத்தனை போலீசாரும் திகைத்து நின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூபாய் 60 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 6 லட்சம் பணத்தை முடக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பாண்டுரங்கன் வேறு என்னென்ன குற்றங்கள் புரிந்து உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: