சென்னையில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் ஜவஹர் நகர் ஜி.கே.எம் காலனி 37வது தெருவைச் சேர்ந்தவர் தம்பதியினர் ரகு(45) - சபி(41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3-ம் தேதி ரகு மற்றும் இரண்டாவது மகன் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மூத்த மகன் பாலாஜி என்பவர் அருகில் இருந்த மெடிக்கலுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் சபி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அந்நேரம் வீட்டிற்குள் வந்த இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கதவை மூடிவிட்டு சபி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை பறித்து தப்பி செல்ல முற்பட்டனர். கடையிலிருந்து வீடு திரும்பிய பாலாஜி அவர்களை பிடிக்க முற்பட்ட போது கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொடுங்கையூர் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் (23) என்ற நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கார்த்திக்கை கைது செய்த கொளத்தூர் போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூர் செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (23) மற்றும் அவரது மனைவி திவ்யா (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திவ்யா என்பவர் வீடுகளை உளவு பார்த்து தனது கணவர் பாலாஜியிடம் எந்த வீட்டில் திருடலாம் என தகவல் கூறியதாகவும் அதனடிப்படையில் பாலாஜி அவரது நண்பர் கார்த்திக்கை வைத்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.