சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி - பக்தர்களுக்கு அனுமதி?

கோப்புப் படம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரசின் உத்தரவு பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கோவில், மசூதி, தேவாலயம், தர்கா உள்ளிட்டவை செயல்பட நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  எனினும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் தெளிவாக இடம் பெறாதது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா 2வது அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் 28ம் தேதி முடிவடைகிறது. ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

கோயில்கள் திறப்பு தொடர்பாக பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்திருந்தார்.  மேலும், கோவில்களில் தற்போது பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி இல்லை, தினசரி பூஜைகள் நடைபெற்றுதான் வருகின்றன. டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை  5ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கை  தமிழக அரசு நீட்டித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து  மத வழிபாட்டு தலங்களும் நிலையான  வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி  செயல்பட அனுமதிக்கப்படும்.  அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படாததால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: