சென்னை பாஜக அலுவலத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலத்தில் நள்ளிரவு 1 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து மாம்பலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்ததில் அதில் பதிவான அடையாளங்களை கொண்டு குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தி அறிந்த அக்கட்சியினர் குவியத் தொடங்கினர். இதனையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பாஜக தொண்டர்கள் இச்சம்பவத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் வினோத் என்ற கருக்கா வினோத் ( வயது 38) என்பது தெரியவந்தது. வினோத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத ரீதியாகவோ , அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. பொது பிர்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டனர் என்பதும் தெரியவந்தது.
நீட் தேர்வு தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. கருக்கா வினோத் E-3 தேனாம்பேட்டை காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளது.2015-ல் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாம்பலம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளூத்தி வீசியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.