காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷாஸதி பாத்திமா கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக காஷ்மீரீல் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் கட்டாயம் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கடினமான சூழலுக்கு தள்ளப்படுவார்கள் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .
இந்த நிலையில் அங்குள்ள மருத்துவர் ஒருவர் தமிழ்நாட்டில் இதற்கான சிறப்பு மருத்துவ வசதிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக சென்னையில் அமைந்திருக்கக்கூடிய எம் ஜி எம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற ஷாஸதி பாத்திமா வந்துள்ளார்.
அப்போது அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஓரிரு மாதங்களில் இருதய அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அபாய கட்டத்திற்கு செல்ல நேரிடும் என கண்டறிந்துள்ளனர்
அப்பொழுதுதான் மருத்துவமனையின் மூலம் ஷாஸதி பாத்திமா குறித்த தகவல் அறிந்த ஐஸ்வர்யா அறக்கட்டளை குழுவினர் நோயாளியின் முழு விவரங்களை கேட்டறிந்தனர்.
ஷாஸதி பாத்திமாவின் பெற்றோர் வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழலில் அவரது சகோதரர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு துணிக் கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றிக் கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் மருத்துவச் செலவுகளையும் பார்த்து வந்துள்ளார். அந்த வருமானம் மூலம் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா காலணி டெண்டர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இருந்தாலும் தன் தங்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ரயில் மூலம் சென்னை வந்து சிகிச்சை வழங்க முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில், குடியரசுத் தினமான ஜனவரி 26ம் தேதியன்று திருச்சியை சேர்ந்த 18 வயது இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.
அதன் பிறகு விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்தார் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அந்த நல் உள்ளத்தின் காரணமாக 350 கிலோமீட்டர் பயணித்து விமானம் மூலம் நான்கு மணி நேரத்திற்குள்ளாக இதயம் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இந்த இதயம் ஷாஸதி பாத்திமாவுக்கு உடனடியாக பொருத்தப்பட்டது.
மேலும் படிக்க: சென்னை வருவோர் கவனத்திற்கு... பாலாறு பாலம் பராமரிப்பு பணி நிறைவு; மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் தேதி அறிவிப்பு
இதற்கான செலவை ஐஸ்வர்யா அறக்கட்டளை ஏற்றுகொண்டது. மூன்றரை வயது குழந்தை ஐஸ்வர்யா இருதய நோயால் உயிரிழந்ததால் அன்று முதல் இன்று வரை இது போன்று இருதய நோயால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார் ஐஸ்வர்யா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சித்ரா.
மூச்சு விடவே சிரமப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வாழ்வு கிடைத்துள்ளது என்றும் இதயத்தை வழங்கியவர்கள் நன்றி என்றும் ஷாஸதி பாத்திமா உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.