தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 4வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 17 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், இதுவரை 62 % பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களையும் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதேபோல் தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் தற்போது போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மழைக்காலம் வந்தாலே டெங்கு பரவும். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. டெங்கு பரவலை தடுக்க மேலும் துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசால் வீடு இடிக்கப்பட்டு 9 மாதங்களாக சமுதாயக் கூடத்திலேயே வாழும் 9 குடும்பங்கள்- உதவுமா அரசு
இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுவதாக தெரிவித்த அமைச்சர், அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம்.போராடியவர்கள் போராட்டம் நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்தார்கள் என்று கூறினார்.
மேலும் படிங்க: அக்டோபர்-டிசம்பரில் இரட்டிப்பாகும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் ரத்து செய்ய முடியாது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை.விரைவில் அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.