வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை பெற்று வருவதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எப்படியும் இறுதி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இரவு 12 மணியாகும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் தற்போது வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 138 தொகுதிகளிலும், அதிமுக 97 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதனால் உற்சாகம் அடைந்த திமுக தொண்டர்கள் தேனாம்பேட்டையிலுள்ள கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் கூடி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, ”தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.
இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்துகொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.
திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித்
தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் கூடி கொண்டாடி வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.