சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் திங்கள் கிழமை இரவு தலைமைச் செயலக காலனி போலீசார் வாகன தணிக்கையில் ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த கொலை, கொலை முயற்சி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடமிருந்து 2 கஞ்சா பொட்டலம், பட்டா கத்தி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் விக்னேஷிற்கு திடீரென உடல் பாதிக்கப்பட்டதால் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விக்னேஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு கொண்டு வந்த விக்னேஷுக்கு வலிப்பு வந்ததால் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. விக்னேஷ் மீது வீட்டை உடைத்து கொள்ளையடித்ததாக வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தலைமைச் செயலக காலனி போலீசார் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் அயனாவரம் காவல் நிலையத்தில் வைத்து விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றும், மறுநாள் காலை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தான் விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்ட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக மரணம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் பிரபாகரன் துறைரீதியிலான விசாரணை நடத்தினார். காவலர்களிடம் இணை ஆணையர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார். இரவு வாகன சோதனையில் விக்னேஷை கைது செய்த உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Must Read : ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
இந்நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.