சென்னையில் இன்று நடைபெற்ற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருப்பூரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் சங்கர் 26 பதக்கங்களை அள்ளி சென்றார்.
சென்னையில் இன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இளங்கலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் திருப்பூரை சேர்ந்த சங்கர் என்கிற மாணவர் பல்கலைக்கழக அளவில் முதன்மை மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கால்நடைக் இளங்கலைப் படிப்பில் பெரும்பான்மையான பாடங்களில் முதல் மாணவராக வந்ததை தொடர்ந்து இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவருக்கு 26 பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிடம் பேசிய மாணவர் சங்கர், எம்பிபிஎஸ் படிப்புக்கு தான் முயற்சி செய்ததாகவும் ஆனால் போதிய கட் ஆப் இல்லாததால் கால்நடை மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்து படித்ததாக குறிப்பிட்டார். முழு ஈடுபாட்டுடன் படித்ததால் ஏராளமான பதக்கங்களை பெற முடிந்ததாக பெருமிதத்தோடு கூறினார்.
Also read... புதுச்சேரியில் ரூ. 6312 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்... காங் - திமுக வெளிநடப்பு
தற்போது கேரளாவில் முதுகலை கால்நடை மருத்துவம் பயின்று வரும் மாணவர் அடுத்தகட்டமாக ஆராய்ச்சி முடித்து இத்துறையில் சேவை புரிய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடை சார்ந்த படிப்பில் சிறந்த முறையில் முடித்து ஏராளமான விருதுகள் குவித்த மாணவர் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.