மருத்துவர்கள் அஜாக்கிரதை; பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைக்கப்பட்ட கத்திரிக்கோல் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அகற்றம்!

12 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றம்

வயிற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து சரிவர சொல்லாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மட்டும் பாலாஜியிடம் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கத்தரிக்கோலை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர் புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33 வயது). அதே பகுதியில் கூலி  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரசவத்திற்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியுற்று வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி இவருக்கு வயிற்று வலி கடுமையாக ஏற்பட்டது. அவரது கணவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குபேந்திரி வயிற்றுக்குள் கத்திரிக்கோல் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பாலாஜியிடம் டாக்டர்கள் மழுப்பலாக பதில் அளித்து ஸ்கேன் அறிக்கையையும் அவரிடம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து பாலாஜி அவரது மனைவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மீண்டும் ஸ்கேன் செய்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனைகள் வயிற்றுக்குள் கத்திரிக்கோல் அப்படியே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பாலாஜியுடன் கூறியுள்ளார்.

    வயிற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து சரிவர சொல்லாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மட்டும் பாலாஜியிடம் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாலாஜி இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அன்று இரவு அறுவை சிகிச்சை செய்து வெளியே கத்திரிகோலை எடுத்தனர்.

    தனது மனைவிக்கு மூன்றாவது பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது டாக்டர்கள் அஜாக்கிரதையாக வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து விட்டனர் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாலாஜி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இமெயில் மூலம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் தனது மனைவிக்கு கடந்த 18ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது. ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் அறிக்கை தர மறுத்து வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மறைத்துள்ளனர்.  பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்த பின்னரே கத்தரிகோல் வயிற்றுக்குள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    12 வருடம் கழித்து வயிற்றுக்குள் இருக்கும் கத்திரிக்கோலை எடுக்க எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல் பலவீனமடைந்து அன்றாட கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    திருத்தணி அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும் கட்டண ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே அறிக்கையை தரமறுத்த திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீதும் மனைவியின் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே வின் முழு உண்மையை அறிக்கை தர மறுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    முழு  பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டும் மருத்துவர்கள் அதை அந்த பெண்ணின் கணவரிடம் தெரிவிக்காமல் மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - பார்த்தசாரதி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: