சென்னையில் ரேசன் கடையில் கொரோனா நிவராண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை!

ரேசன் கடையில் கொள்ளை

இதனால் கொரோனா நிவாரண தொகை வாங்க ரேசன் கடை வந்த ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

  • Share this:
    சென்னையில் அடையாறில் உள்ள ரேசன் கடையில் கொரோனா நிவராண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை காவேரி நகர் 1வது தெருவில் 24 மற்றும் 25ஆம் எண் கொண்ட ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேசன் கடையில் 1,784 குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியான 2,000 ரூபாயை பொதுமக்களுக்கு கடந்த 15ம் தேதியிலிருந்து ரேசன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

    நேற்று வழக்கம் போல் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு நிவாரண தொகையை வழங்கிவிட்டு 24ஆம் எண் கடையில் 7.36 லட்ச ரூபாய் பணத்தை வைத்துவிட்டு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் கடையின் மேற்பார்வையாளரான குணசேகரன் கடையை திறக்க வரும் போது 24ஆம் எண் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்க்கும் போது கொரோனா நிவாரண நிதி தொகையான 7.36 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் கொரோனா நிவாரண தொகை வாங்க வந்த ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர் குடிமை பொருள் அதிகாரிகள் வேறு இடத்திலிருந்து பணத்தை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இது குறித்து ரேசன் கடை மேற்பார்வையாளரான குணசேகரன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் குடிமை பொருள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கொள்ளையர்கள் எந்த வழியாக வந்து கொள்ளையில் ஈடுபட்டனர் என்ற முதற்கட்ட விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: