பைக் ரேஸில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் உட்பட ஐந்து இளைஞர்களை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது சென்னையில் வாடிக்கையாகி வருகிறது இதனை கட்டுப்படுத்த சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனடிப்படையில் இரவு நேரங்களில் போலீசார் பைக் சாகசங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மெரினா கடற்கரை சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ், ரோமன் அல்கிரேட், ஹரிகரன், முகமது சாதிக், முகமது ரகமத்துல்லா, முகமது ஆசிப் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு புளியந்தோப்பு பகுதியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுப்பட்டனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பைக் ரேஸில் ஈடுப்பட்ட இளைஞர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தண்டையார்பேட்டை நேரு நகரைச் சேர்ந்த டிவின் குமார்(20), அதே பகுதியைச் சேர்ந்த மோவின்(20), தண்டையார்பேட்டை வ.உ.சி நகரைச் சேர்ந்த ஹரீஷ் குமார்(22), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி(20), திருவொற்றியூர் ரயில்வே காலனியைச் சேர்ந்த சல்மான்(19) ஆகிய 5 நபர்களை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
Also read... பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என பல கோடி மோசடி - 20க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் புகார்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிவின் குமார் என்பவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தனசேகர் என்பவரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து 5 விலை உயர்ந்த இருசக்கர வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பைக் ரேஸில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.