கருப்பு பூஞ்சைக்கான மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: அதிரவைக்கும் கருப்பாடுகளின் நெட்வொர்க்!

கள்ளச் சந்தையில் விற்பனை

தமிழகத்தில் இவ்வகை மருந்துகள் இன்னும் கிடைக்காத நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளத் தனமாக பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்றுள்ளனர். ரெம்டெசிவர் மருந்தை விட இதனை இரண்டு மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.

  • Share this:
கருப்பு பூஞ்சை நோய்க்கான வெளிநாட்டு மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்த்து வந்த நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தியாவில், கொரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோயும் அண்மைகாலமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் கருப்பு பூஞ்சையை குணப்படுத்தும் மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது.  இதனை சில கும்பல்கள் சாதகமாக்கி பணம் ஈட்டி வருகின்றன.

சென்னையில் சமீபகாலமாக கருப்பு புஞ்சை நோய்க்கு போடப்படும் ஊசி மருந்தை கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக சென்னை காவல்துறை தனிப்படை அமைத்து செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழுவோடு சேர்ந்து சென்னையின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் மூன்றாவது  நபர்களின் மூலமாக அண்ணா சாலை போலீசார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு கால் செய்து தங்களுக்கு உடனடியாக கருப்பு  பூஞ்சை நோய்க்கான மருந்து வேண்டுமென கூறி அண்ணாசாலை எல்.ஐ.சி பில்டிங் அருகே வர சொல்லி உள்ளனர்.

இதையும் படிங்க.. கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்..

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது மற்றொரு தோழியுடன் ஆட்டோவில் எல்ஐசி அருகே வந்து கால் செய்தபோது மறைந்திருந்த அண்ணாசாலை போலீசார் ஆட்டோவில் வந்த 2 பெண்களையும், இருசக்கர வாகனத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்களையும் கைது செய்து, அண்ணா சாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

போலீசாரிடம் பிடிபட்ட இவர்கள் ஆதம்பாக்கத்தை சேர்ந்த உம்முகுல்சம்(26), கானாத்தூரை சேர்ந்த  பவுசானா(32), விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ்(21), செங்கல்பட்டை சேர்ந்த விவேக்(25) ஆவர். இவர்கள் நான்கு பேரும் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் போது நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர் என்பதும், தற்போது கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் அதிக லாபம் பார்க்கலாம் என திட்டம் போட்டு நான்கு பேரும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மருந்தை பார்த்த போலீசாருக்கு பேரதர்ச்சி ஏற்பட்டது. காரணம், அவர்கள் வைத்திருந்த மருந்தானது  வெளிநாடுகளிலிருந்து கருப்பு பூஞ்சை நோய்க்காக பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்தாகும். குறிப்பாக இவ்வகை மருந்துகள் இன்னமும் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என போலீசார் உறைந்து போயினர்.

பெங்களூரில் சில தனியார் மருத்துவமனைகளின் மூலம் கிடைக்கும் இந்த மருந்து அங்குள்ள முக்கிய மருந்து கடைகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக அதிக விலையில் விற்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த இவர்கள் ஒரு குப்பியை ரூ.15-20 ஆயிரம் விலைக்கு வாங்கி அதனை காரின் மூலமாக சென்னை கொண்டுவந்து ஒரு குப்பியை ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர். ரெம்டெசிவர் மருந்தை விட இரண்டு மடங்கு விலைக்கு கருப்பு பூஞ்சை மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால் அதிக லாபம் பார்த்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த இம்ரான் என்பவர் மூலமாகவே பெங்களூரில் இருந்து இந்த மருந்தானது இவர்களின் கைக்கு கிடைத்து வந்துள்ளது என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷின் தாய் ஸ்டான்லி மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வருவதும், அந்த செவிலியரின் மூலமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவர் மருந்ததை திருடி ராஜேஷ் கள்ளச் சந்தையில் விற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ராஜேஷின் மூலமாக இந்த மருந்தானது பெங்களூரில் இருந்து சென்னை வருவதும் அதனை தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டு செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 நபர்களிடமிருந்து 8 மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் இம்ரான் யார்? பெங்களூரில் எந்தெந்த மருந்துக்கடைகளில் இவர்கள் இந்த வகை வெளி நாட்டு இறக்குமதி மருந்துகளை வாங்கினர். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ராஜேஷின் தாயின் மூலமாக ரெம்டெசிவர் மருந்து கள்ள சந்தையில் விற்கப்பட்டது போல, இந்த மருந்து விவகாரத்திலும் ராஜேஷின் தாய் தலையீடு இருக்குமா? என்ற ரீதியில் சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: