பல்லாவரம் அருகே 86 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம். இவர் (Builder) கட்டிடம் கட்டி தரும் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 16.03.22 அன்று குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு 7 நாட்கள் கழித்து தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது,
அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 86 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்தி 50,ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் காணாமல் போனது தெரியவந்தது. உடனே குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் புகார் அளித்தார் சிவசண்முகம்.
சங்கர் நகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று குற்றவாளியின் கைரேகையை கைப்பற்றியும் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணையை தொடங்கினார். புகார் கொடுத்து பத்து நாட்கள் ஆகியும் கொள்ளையனை கண்டுபிடிக்க முடியவில்லை, சிவசண்முகம் இந்த சம்பவம் குறித்து தாம்பரம் கமிஷனர் ரவியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Rama Navami | ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ ராம நவமி விழா (படங்கள்)
தாம்பரம் கமிஷனர் உத்தரவின் பேரில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது கடந்த 5 வருடத்திற்கு முன்பு பல்லாவரத்தில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பம்மல் நாகல்கேணி ஈஸ்வர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஞானமூர்த்தி (எ) மூர்த்தி (39) என தெரியவந்தது.
அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது சவாரிக்காக திருவண்ணாமலைக்கு சென்றதாக மூர்த்தியின் உறவினர்கள் தெரிவித்தனர். மூன்று நாட்களாக காத்திருந்து மூர்த்தியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார், தங்களின் பாணியில் விசாரணை நடத்திய போது ஆட்டோவை புதுப்பிப்பதற்கும் மற்றும் உல்லாச வாழ்க்கைக்காகவும் 1,50,000 பணத்தை முழுவதும் செலவு செய்து விட்டதாக கூலாக பதில் அளித்தார். நகைகள் எங்கே என போலீசார் கேட்டபோது 86 சவரன் நகைகளை பத்திரமாக ஆட்டோவின் இருக்கையின் அடியில் வைத்திருப்பதாகவும் நீங்கள் பயப்பட வேண்டாம் என போலீசாரிடம் மூர்த்தி தெரிவித்துள்ளார். பின்னர் ஆட்டோவில் இருந்த நகையை மீட்டு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
ALSO READ | 90s கிட்ஸ் மட்டும் தானா... ஏன் நாங்க இல்லையா? களத்தில் குதித்த 70ஸ் கிட்ஸ் - இது சிவாஜி ஸ்டைல்
மேலும் விசாரணையில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு பல்லாவரம் பகுதியில் நகை கொள்ளை சம்பவம் அரங்கேற்றி சிறைக்குச் சென்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கும், எளிதில் பணக்காரனாகிவிடலாம் என்பதற்காக கொள்ளை அடித்ததாக குற்றவாளி பகீர் வாக்குமூலம் அளித்தார். அதன்பிறகு மூர்த்தியின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : சுரேஷ் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.