சென்னையில் நேற்று முழு ஊரடங்கின்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத மற்றும் 100 நபர்களுக்கு மேல் கூடிய 21 திருமண மண்டபங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உட்பட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் கூடங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகராட்சியின் சார்பில் மண்டல அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
23.01.2022 அன்று மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 306 நிகழ்ச்சி நடைபெறும் கூடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் 21 நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் அரசின் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத மற்றும் 100 நபர்களுக்கு மேல் கூடிய திருமண மண்டபங்களில் ரூ. 21,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
06.01.2022 முதல் 23.01.2022 வரை மொத்தம் 1417 நிகழ்ச்சி நடைபெற்ற கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 121 இங்டகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.1,33,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களிடம் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவு வாயில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் படிக்க: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை வெளியீடு..நாமக்கல் மாணவி மாநில அளவில் முதலிடம்
மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளவும், அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமரவும் மண்டப உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.