தமிழகத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அரசு மருத்துவமனையாகும். அங்கு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வாரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 39 வயது ஆண் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்திருந்தார். அவரது உறுப்புகளை தானம் தர அவரது குடும்பத்தினர் தயாராக இருந்தனர். உடனே இந்த தகவல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரலுக்கு நோயாளிகள் காத்திருப்பதால், அதில் உடல் தகுதியான நோயாளியை கண்டறிந்தது மருத்துவமனை. கல்லீரலை மதுரையிலிருந்து கொண்டுவர இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஜஸ்வந்த் விரைந்து சென்றார்.
"கல்லீரல் உடலிலிருந்து எடுத்த பிறகு 12 முதல் 15 மணி நேரத்துக்குள் மீண்டும் பொருத்த வேண்டும். மதுரையில் 11 மணிக்கு கல்லீரல் தானம் கொடுப்பவரிமிருந்து எடுக்கப்பட்டது. விமானம் மூலம் கல்லீரல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமானம் மூலம் கல்லீரல் எடுத்து வருவது இதுவே முதல் முறை. கல்லீரலுக்கும் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது.
கல்லீரல் 4 டிகிரி செல்சியல் பதப்படுத்தி கொண்டு வரப்பட்டது. கல்லீரல் அகற்றப்பட்ட 8 மணி நேரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த 52 வயது ஆணுக்கு பொருத்தப்பட்டது. அவர் சென்னை அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ஆவார். ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் நான்கு பேர் உட்பட 14பேர் இந்த அறுவை சிகிச்சை குழுவில் இருந்தோம்." என்று மருத்துவர் ஜஸ்வந்த், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் கூறுகிறார். தமிழ்நாட்டிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற ஒரே மருத்துவர் அவர் ஆவார்.
கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் நோயின் தீவிரத்தனமை பொருத்து வகைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதனடிப்படையிலேயே கல்லீரல் வழங்கப்படும் என்றும் இரைப்பை குடல் சிறப்பு மருத்துவர் ரேவதி தெரிவிக்கிறார். மது அருந்துதல் அல்லாமல் பல காரணங்களால் கல்லீரல் செயலிழக்கலாம் என்றும் கூறுகிறார்.
Also read... சின்னமனூர் காவல் நிலையத்தில் பொது நூலகம்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2009ம் ஆண்டு முதல் 81 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த தமிழகம் கடந்த ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதை சுட்டிக் காட்டி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.