சென்னையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையின் காரணமாக பிரவுசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்திவந்தவர் தினேஷ்(41). இவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கோயம்பேடு முல்லைத்தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கியபோது தினேஷ் வீட்டின் ஹாலிலேயே படுத்து உறங்கியுள்ளார். இன்று அதிகாலை அவரது மனைவி அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மி: ₹7 லட்சம் இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை
தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், தினேஷ் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில் தான் பலரிடமிருந்து 15 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கடனாக வாங்கியதாகவும், வேறு நபர்களுக்கு சில லட்சங்களை கடனாக கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார் என்பதையும், யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை - தமிழக அரசு எச்சரிக்கை
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தினேஷின் மனைவியிடம் விசாரணை செய்தபோது, தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்ற கடனை திருப்பித்தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் துரைப்பாக்கத்தில் குடும்பத்தைக் கொன்றுவிட்டு வங்கி உதவி மேலாளர் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்லைன் ரம்மி பாதிப்பின் வீரியத்தை உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க : கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை
இந்நிலையில் தினேஷின் மரணத்திற்கு கடன் தொல்லை காரணமா? அல்லது ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தது தான் காரணமா? ஆகிய இரு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
================================
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.