ஆன்லைன் ரம்மி மோகம்.. வழிப்பறி கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
ஆன்லைன் ரம்மி மோகம்.. வழிப்பறி கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
ஆன்லைன் ரம்மி மோகம்
Chennai : சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அந்த நபர் நகைபறிப்பில் ஈடுபட்டு அதனை விற்று அந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வயதான பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது. 5 நகை பறிப்பு சம்பவங்களால் ரயில் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருவான்மியூர், பெருக்குடி, வேளச்சேரி உள்பட பறக்கும் ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று தீவிரமாக கண்காணித்தனர். வயதான பெண்களிடம் மதிய வேளைகளில் நகைபறிப்பு சம்பவங்கள் அனைத்து நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த நேரங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணிடம் அடையாளம் தெரியாத ஒருவன் நகையை பறித்து ஓடினான். தனிப்படை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிந்தது. மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவர் தான் 5 தங்க நகை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் நடத்திய விசாரணையில், கைதான ஜெயராமன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்துள்ளவர். ஆன்லைன் ரம்மி மீண்டும் மீண்டும் விளையாட பணம் இல்லாததால் ஜெயராமன் பறக்கும் ரயில் நிலையங்களில் வயதான பெண்களை குறிவைத்து தங்க நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 ஆயிரம் வரை இழந்து வந்ததால்
வயதான பெண்களிடம் நகை பறித்தால் தன்னை துரத்தி பிடிக்க முடியாது. அதனாலேயே வயதான பெண்களை குறிவைத்து நகை பறித்ததாக கைதான ஜெயராமன் வாக்குமூலம் அளித்துள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.கைதான ஜெயராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையனை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசாரை ரயில்வே காவதுறை கூடுதல் டிஜிபி வனிதா நேரில் அழைத்து சான்றிதழ வழங்கி பாராட்டினார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.