சென்னை அருகே மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு வந்த பானுமதி அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
Must Read : தாய் தந்தையை கொன்று நாடகமாடிய மகன்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இதில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், ராஜஸ்தானில் நடந்த கபடி போட்டி முடித்து விட்டு நேற்று காலை ராஜஸ்தானில் இருந்து வந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத போவதாக தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக மாங்காடு போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர் - சோமசுந்தரம்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.